இது குழந்தைகளின் உலகம் – காயத்திரி .கே , மனநல ஆலோசகர்
இன்றைய சமுதாயத்தில் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி உருவாகி உள்ளது. இந்த இடைவெளிக்கு முக்கிய காரண நம்மிடையே இருக்கும் இன்றைய மழலைபருவம் என்பது பார்ப்பது, தவழ்வது, நடப்பது, கை, கால் அசைப்பது என்று நிகழ்வதை விட செல்போன் எவ்வளவு நேரம் குழந்தைகளின் உடலோடு இருக்கிறது என்பது தான் இன்றைய சமூக பிரச்சனைகளில் மிக முக்கியமாக உள்ளது. அம்மாவின் உடலோடு குழந்தை இருப்பதை விட செல்போன் உடலோடு குழந்தைகள் அதிக நேரம் செலவிடப்படுகிறது. செல்போனால் இன்றைய குழந்தைகளின் மன வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி மிக அளவில் பாதிக்கப்படுகிறது.
குழந்தைகளின் உலகம் சாப்பிடுவதில் ஆரம்பித்து பள்ளி செல்வது வரை செல்போனில் ரைம்ஸ், குழந்தைகளுக்கென சிறப்பு விளையாட்டு ஆப்கள் தான் இன்றைய குழந்தைகளின் உலகத்தை முழுவதுமாக ஆக்கிரமித்து உள்ளது. செல்போன் தான் இன்றைய சமூகத்தில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு, அன்பு, பேச்சு வார்த்தை, விளையாட்டு என்று அனைத்தையும் கொடுத்து கொண்டு இருக்கிறது. குழந்தைகள் பல ரைம்ஸ் மற்றும் ஸ்பெஷல் ஆப் மூலம் தனக்கென்று புதிய உலகத்தை உருவாக்கி கொள்கிறார்கள். இதற்கு மிகப்பெரிய உறுதுணையாக இருப்பவர்கள் யார் என்றால் இன்றைய பெற்றோர்கள். பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையே ஒரு பாலம் யார் என்றால் இன்றைய செல்போன் தான். பெற்றோர்கள் இப்பொழுது மிக விழிப்புணர்வுடன் மற்றும் பதற்றத்துடன் இருக்கிறார்கள். பல பெற்றோர்களுக்கு இன்றைய குழந்தைகளின் செல்போன் அடிமைக்கு தாங்கள் தான் காரணம் என்று குற்ற உணர்வுடன் பலர் பல இடங்களிலிருந்து வரும் அறிவுரைகளை கடைபிடிக்க முயல்கின்றனர்.
முதலில் வளரும் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன அளவில் செல்போன் உபயோகிப்பதால் வரும் பிரச்சனைகள் அதிகம். குழந்தைகள் ஒரு நாளைக்கு ஒரு நிமிடத்திற்கு 15 முதல் 20 தடவை கண் சிமிட்ட வேண்டும். ஆனால் செல்போன் பார்ப்பதால் குழந்தைகள் கண் சிமிட்ட மறந்து விடுவார்கள். அதனால் கண் சிமிட்ட மறக்கும் குழந்தைகளுக்கு மூளைக்கு செய்திகளை கடத்தும் நரம்புகள் மிகவும் பாதிப்படைகின்றன என்று பல டாக்டர்கள் கூறுகின்றனர். கை விரல்கள் எழுதவும், விளையாடவும் வேண்டிய நேரத்தில் ஐபாட், செல்போனில் இருப்பதால் கை விரல்களின் செயல்கள் மிகவும் பாதிப்படைகின்றன. குனிந்து கொண்டே குழந்தைகள் செல்போனில் விளையாடுவதால் கழுத்து நரம்புகள் எளிதில் பாதிப்படைகின்றன. இவ்வாறாக உடலளவில் வளர வேண்டிய உடல் பாகங்கள் பல விதங்களில் செல்போனால் குழந்தைகளை ஒரு தனி மூலைக்குள் தள்ளி விடுகின்றன.
ஒவ்வொரு குழந்தைகளும் அம்மா, அப்பாவின் உடல் மொழிகளை பார்த்து, ரசித்து, பிரமித்து பல செய்கைகளை வெளிப்படுத்துகின்றன. ஆனால் இன்று பெற்றோர்களிடம் உள்ளே உடல் மொழிகளை கவனிக்க விடாமல் பல விஷயங்கள் குழந்தைகளின் எண்ணத்திற்கு எதிராக வெளி உலகம் தொழில் நுட்பத்துடன் வேகமாக வளர்ந்து உள்ளது. என்ன தான் உலகம் வேகமாக வளர்ந்தாலும் குழந்தைகள் வளர ஒரு கால நேரம் உள்ளது. அந்த அந்த நேரம் மற்றும் மாதத்தில் மட்டும் தான் குழந்தைகளுக்கான செயல்திறன்கள் முழுமையாக செயல்படும்.
ஆனால் இன்றைய பெற்றோர் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் அனைத்து குழந்தைகளும் அறிவாளிகளாக உடனுக்குடன் அந்த முடிவு தெரிய வேண்டும் என்பதில் குழந்தைகளை மனித எண்ணத்துடன் பார்ப்பதை விட புகழ் வெளிச்சம் பட வைப்பதில் அனைத்து குழந்தைகளையும் தயார் செய்கின்றனர். இந்த சமூகம் ஏதோ ஒரு வகையில் அவர்களது குழந்தைகளை மிகைப்படுத்தப்பட்ட தனித்துவத்துடன் இந்த சமூகம் பார்க்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதற்கு துணையாக செல்போனின் துணையை நாடுகின்றனர்.
குழந்தைகளிடம் செல்போன் கொடுப்பதை முதலில் நிறுத்துங்கள். குழந்தைகளோடு நேரடி தொடர்பு அதிகமாக இருப்பதை பழக்கபடுத்தி கொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தைகளும் ஒரு தனி உலகம். அவர்களோடு பழகுவது மிகப்பெரிய வரம். அவர்களது விருப்பத்தை தெரிந்து கொள்ளுங்கள். அவர்களது உடல் எந்த தொழில் நுட்பமும் சாராமல் நேரடியாக இயற்கையோடு இருக்குமாறு வைத்து கொள்ளுங்கள். அவர்களது நண்பர்களுடன் விளையாடுவது, பேசுவது, படம் வரைவது, சாப்பிடுவது என்று அவர்கள் வயதை ஒட்டிய குழந்தைகளோடு அதிக நேரத்தை செலவிட செய்யுங்கள். அவர்கள் வயதில் குழந்தைகள் குறைவு என்றால் பெற்றோர்கள் அதிகமான நேரத்தை குழந்தைகளிடம் செலவு செய்யுங்கள். குழந்தைகள் வயதுக்கு மேல் வளர்ந்தவுடன் உங்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்தும் நேரத்தை கொஞ்சம் அதிகப்படுத்தி கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு கதை சொல்லி பழகுங்கள். இந்த உலகமே வார்த்தைகளில் தான் இயங்குகிறது. சொற்களின் மூலமாக தான் குழந்தைகளின் உலகத்தை எளிதாக பெரிதாக முடியும். மனிதனுடைய எல்லா உணர்வுகளையும் சொற்கள் பிரதிபலிக்கும். தமிழ் சமூகத்தில் கதை சொல்வது கடமையாக இருக்கிறது. அதனால் கதைகள் மூலம் நம் வரலாறு, கலாச்சாரம், நல்ல எண்ணங்கள், பார்வைகள் அனைத்தயும் குழந்தை பருவத்திலேயே பெற்றோர்கள் செய்ய வேண்டும். இவ்வாறாக குழந்தைகளின் உலகத்தை செல்போனில் இருந்து மனித உலகத்திற்குள் நடமாட செய்யுங்கள். மனிதனை நேசிக்கவும், மனித பண்பை வளர்க்கவும், மனிதனை மன்னிக்கவும், மனித உறவுகளை அதிகப்படுத்தவும் வேண்டும் என்றால் இவை அனைத்தும் குழந்தை பருவத்தில் இருந்தே தெரிய வேண்டும். அதற்கு பெற்றோர்களும் பழகுங்கள் குழந்தைகளுடன் வேறு உலகத்திற்கு சென்று வாருங்கள்.