எங்கே எனது இயற்கை? இல.சண்முகசுந்தரம்
உங்கள் குழந்தைக்கு எந்த ஃபிளார் பிடிக்கும்?
ஒரு மாம்பழம் மற்றும் ஒரு மாம்பழரச பாக்கெட்
இந்த இரண்டையும் ஒரு சிறுவனின் முன்னால் வைத்தால் அந்தச் சிறுவன் எதைத் தேர்ந்தெடுத்துக் குடிப்பான்?
இதிலென்னங்க சந்தேகம், டக்குனு அந்த பாக்கெட்டைத்தான் எடுப்பான் என்று பட்டென்று பதில் சொல்லத் தோன்றுகிறதல்லவா.
சரி. நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலை மனசுக்குள் சொல்லியிருப்பீர்கள். ஆனால், இந்த இரண்டில் எது நல்லது எனக்கேட்டால், மாம்பழம்தான் நல்லது என்று உடனே சொல்லிவிடுவோம்.
ஆனால், அந்தச் சிறுவனுக்கு எது நல்லது எனத் தெரியவில்லையே, ஏன்? நல்லதைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடும் அறிவு அந்தச் சிறுவனுக்கு ஏன் போதிக்கப்படவில்லை? யார் புகட்டவேண்டும்?
தற்போது வயது முப்பதைத் தொடுவோருக்கெல்லாம் பழம் நல்லது என ஒரளவுக்குத் தெரிந்திருக்கிறதே, யார் அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது? பள்ளிக்கூடத்திலா அல்லது வீட்டிலா?
நமது பள்ளிக்கூடங்கள் உணவுமுறை குறித்து எப்போதும் பேசியதேயில்லை. ஆரோக்கியமே உணவில் இருந்துதான் துவங்குகின்றது என்பதால், இயல்பாய் ஆரம்பக் கல்வியிலேயே உணவைப் பற்றி பேசியிருந்திருக்க வேண்டும். ஆங்கிலேயனுக்கு அடிமைச் சேவகம் செய்திடக் கொண்டு வந்த கல்விமுறையின் அடிப்படை இன்று வரை மாறவில்லையென்பதால்தான், இப்போதும் நமது குழந்தைகள் சாக்லெட்டுகளுக்கும், கேக்குகளுக்கும் அடிமையாகிவிடுகின்றனர் சுலபத்தில்.
ஆனால், நமது வீடுகள் அப்படி இருந்ததில்லையே. பாட்டியும், தாத்தாவும், அப்பாவும், அம்மாவும் நமக்கு சொல்லிக்கொடுத்தவற்றை நாம் அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியுமா என்ன? பழம் உடம்புக்கு ரொம்ப நல்லதுப்பா என வார்த்தையோடு முடித்துக்கொண்டவர்களல்லவே அவர்கள்.
ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப என்னென்ன பழங்கள் சந்தையில் கிடைக்குமோ அவற்றையெல்லாம் கடையிலும், தெருவிலும் விற்கும்போதெல்லாம் வாங்கித்தருவார்கள். நறுக்கித் தருவார்கள். அருகில் இருந்து அதன் அருமையை எல்லாம் சொல்லி ஊட்டிவிடுவார்கள். அப்புறம் நாமே அதைக் கடித்துச் சாப்பிடும் அளவுக்கு பயிற்சியும் கொடுத்துவிடுவார்கள். பிடிக்கலைன்னு சொல்ற குழந்தைகளிடம் மடியில் வைத்து ஊட்டிய காலம் போயி, இப்போது பாக்கெட்டுகள் கொடுத்தல்லவா பழக்கப்படுத்துகிறார்கள்.
ஆம். அது நமது பாரம்பரியமாகும். எனது அம்மாவுக்கு, அவரது அம்மாவிடம் இருந்தும், அவருக்கு அவரின் அம்மா, அப்பாவிடம் இருந்தும் என வாழையடி வாழையாக உணவு மரபாக சொல்லிக்கொடுக்கப்பட்ட பாரம்பரியமாகும் அது. ஆனால், இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலோர் ஏன் குழந்தைகளுக்கு பழங்கள் குறித்துச் சொல்வதில்லை? அல்லது சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு ஏன் அவர்களுக்குக்கூட உணவு மரபு குறித்துத் தெரிவதில்லை?
Young mother feeding adorable baby
எப்போது பெற்றோர்கள் தொலைக்காட்சி விளம்பரம் பார்த்து வாங்கிக் கொடுக்க ஆரம்பித்தார்களோ, அப்போதே இந்த உணவுப் பாரம்பரியம் அறுந்துவிட்டது. எனது குழந்தைக்கு பிடித்த ஃபுரூட் ஃபிளார் இதுதான் எனப் பெற்றோர்களே பெருமையாகப் பேச ஆரம்பித்துவிட்ட பின்னர், குழந்தைகளுக்கு உண்மையான பழங்களை விடவும் அதன் போலியான ஃபிளார்தானே பிடிக்கும்?
ஒவ்வொரு பருவத்திற்கும் ஒவ்வொரு விதமான பழங்கள் என இயற்கை வழங்கிய கொடையைப் புரிந்துகொள்வதில் துவங்கியது அந்தப் பாரம்பரியம். எந்தப் பழத்தில் எவ்வளவு சத்து இருக்கிறது, என்னென்ன விட்டமின்கள் இருக்கின்றன என்பதெல்லாம் தெரியாதபோதும், ஆயிரம் ஆண்டுகளாய் நமது முன்னோர்கள் பழங்களை நேசித்தனர். எந்தத் தொந்தரவுக்கு எந்தப் பழம் சாப்பிட்டால் சரியாகுமென மருந்தாகவும் பயன்படுத்தினர்.
ஆனால், இன்று அதில் எந்த விட்டமின் இருக்கிறது என்று தெரிந்தபின்னரோ, அந்த விட்டமின் இந்த ஃபிளாரிலும் இருக்கிறது என ஏதேனும் ஒரு பன்னாட்டு நிறுவனம் சொன்னால் போதும், உடனே அந்தப் பொருள்களை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்துவிடுகிறோம்.
சென்னையில் ஒரிடத்தில் கேழ்வரகுக் கூழ் குடித்துக்கொண்டிருந்த தகவல் தொழிற்நுட்ப இளைஞர்களிடத்தில் பேச்சு கொடுத்தபோது, கேழ்வரகுக்கூழ் நல்லதுன்னு எப்படி உங்களுக்குத் தெரியும் என்றேன்.
இணையத்தில் படித்தோம் என்றார்கள். பாரம்பரியம் அறுந்துபோனதன் வேதனை இதுதான். கேழ்வரகு, வரகரிசி, கொய்யாப் பழம், இளநீர் என நமது உணவுப் பாரம்பரியம் என்ன என்பதையே இனி இணையத்தில் வாசித்துத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் போலிருக்கிறது இளைய தலைமுறையினர்.
கேழ்வரகு நமது பாரம்பரியம் என நினைத்தால் இயற்கையாய் விளைவித்து உணவாய் உண்போம். அதில் உள்ள விட்டமின் மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தால் ராகி பிராடெக்ட்ஸ் எனச் சொல்லும் பன்னாட்டு நிறுவனத்தின் நுகர்வோராய் நாளை நிச்சயம் மாறிவிடுவோம்.
இவ்வாறாக, மண் சார்ந்த பாரம்பரியத்தைக் கைவிடத் தொடங்கியதன் விளைவே தொலைக்காட்சியில் உணவைத் தேடும் புதிய பழக்கமாகும். எந்த நாட்டில் இருந்தோ இலாபத்திற்காக இங்கு வந்த ஒரு நிறுவனம், அது சொல்லும் அத்தனைப் பொருட்களையும் வாங்க ஆரம்பித்துவிடுகிறோம். விட்டமின் நிறைந்தது, டெஸ்டி ஃபிளார், ஹைஜீனிக் என்ற வார்த்தைகளை அப்படியே நம்பிவிடுகிறோம்.
விளைவு. குறிப்பிட்ட நிறுவனத்தின் சாக்லெட்தான் வேண்டும் எனக் கேட்டு என் குழந்தை அடம்பிடிக்கிறது எனப் பெருமையாய் சொல்லும் பெற்றோர்கள் தான் இன்றைய சமூகத்தில் அதிகம். அந்த சாக்லெட்டை அறிமுகப் படுத்தியதே அவர்தான், ஆனால் அவர் சொல்வதைப் பாருங்கள் குழந்தை அடம்பிடிக்கிறதாம்.
குழந்தை முதன்முதலாகக் கேட்டபோதே மறுத்திருக்க வேண்டும். அது நமது உணவல்ல, நமது தின்பண்டமுமல்ல என எளிய மொழியில் சின்ன சின்ன வார்த்தைகளாய் நமது பாட்டி நம்மிடம் பேசியதைப் போன்று பேசியிருக்க வேண்டும். பழங்களையும், கடலை மிட்டாயையும், நெல்லிக்காயையும், சுண்டலையும் கொடுத்திருக்க வேண்டும். எதையும் பேசாமல், காசிருக்கிறது வாங்கிக்கொடுக்கிறேன் எனப் பெருமையாய் வாங்கிக் கொடுத்துவிட்டு, அப்புறம் குழந்தை மீது ஏன் பழிபோடவேண்டும்?
ஐந்தாறு வயதிலேயே கண்ணாடி போட்டுக் கொள்ளத் துவங்கியிருக்கின்றனர் நமது குழந்தைகள். இன்னும் எத்தனை வகை நீரழிவு வியாதிகளை புதுசாய் கண்டுபிடித்து பெயர் சூட்டப்போகிறார்களோ தெரியவில்லை. குழந்தைகளுக்கே வரத் துவங்கியிருக்கிறதாம். கொழுத்து குண்டாகிக் கொண்டிருக்கின்றனர் துள்ளித் திரிய வேண்டிய குழந்தைகள். அதற்குப் பெயர் ஒபிசிட்டியாம். பயந்து காணப்படுகின்றனர் பல்லாயிரம் பெற்றோர்கள்.
தீர்வென்ன, தீர்வென்ன எனத் தேடிக் கொண்டிருப்போரில் பலர் வாழ்க்கை முழுவதும் மருந்தா என நினைத்து பயந்துபோய் புதிய பதிலைத் தேடுகின்றனர். இன்னும் சிலரோ, மருத்துவம் பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து மாத்திரை, மருந்து என சின்னக் குழந்தை முதலே ஆரம்பித்துவிடுகின்றனர்.
ஒரு நிமிடம் நின்று சிந்தியுங்கள.
எது தீர்வு?
மருந்தா? இயற்கை அறிவா?