முக்கிய செய்திகள்

மாநாடு படத்தில் மீண்டும் இணையும் நடிகர் சிம்பு -வெளியான தகவல்

September 11, 2019

நீண்ட ஓய்வுக்கு பின்னர் தாய்லாந்தில் இருந்து நடிகர் சிம்பு விரைவில் தமிழகம் திரும்புவதாகவும், வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் மீண்டும் சிம்பு நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளதுஒரு வயதில் இருந்து திரை உலகில் கலக்கி வந்தாலும் மன்மதன் என்ற ஒற்றைபட வெற்றியால் தமிழ் திரை உலகில் முன்னனி நடிகராக உயர்ந்தவர் நடிகர் சிம்பு.

அதனை தொடர்ந்து வெளியான சில படங்கள் வியாபார ரீதியாக வெற்றி பெறாமல் போனதாலும், ஆரம்பித்த படங்கள் சில அதே வேகத்தில் முடங்கியதாலும் சிம்பு மார்க்கெட்டில் சரிவு ஏற்பட்டது.சிம்பு மீண்டும் திரை உலகில் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிப்பதாக அறிவித்தார்.இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மாநாடு படப்பிடிப்பிற்கு செல்லாமல் தாய்லாந்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இதனால் மாநாடு படம் கைவிடப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார். இந்த விவகாரத்தில் தலையிட்ட சீமான், சிம்புவுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

இதையடுத்து 45 நாள் ஓய்வுக்கு பின்னர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியை தொடர்பு கொண்ட நடிகர் சிம்பு, தான் மாநாடு படத்தை முழு வீச்சில் நடித்துக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளதாகவும், இதற்காக சிம்பு வருகிற 20 ந்தேதி தாய்லாந்தில் இருந்து தமிழகம் திரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து மகிழ்ச்சி அடைந்துள்ள மாநாடு படக்குழுவினர் படப்பிடிப்பிற்கான பணிகளை விரைவாக செய்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். மாநாடு படமாவது சிம்புவின் திரை உலக வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என்பதே சிம்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Top