முக்கிய செய்திகள்

சோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி-நீதிமன்றம் தீர்ப்பு

October 31, 2019

கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் விவகாரத்தில் கைதான நடிகை சரிதா நாயர் உள்ளிட்ட மூவர் குற்றவாளி என்று கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.கேரளாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் முறைகேடு விவகாரம் மாநிலத்தை உலுக்கியது. இது தொடர்பாக நடிகை சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.

சரிதாநாயர் பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர், காங்கிரஸ் அரசில் அமைச்சர்களாக இருந்த பலரும் பண மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார்.மேலும் அப்போதைய முதல்வர் உம்மன்சாண்டி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹிபி ஈடன் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அம்மாநிலத்தில் வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரியில் சோலார் பேனல் அமைத்து தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாகவும் அவர் மீது 2009 ம் ஆண்டு புகார் பதிவு செய்யப்பட்டது.மோசடி தொடர்பாக சரிதா நாயர், அவரது மானேஜர் ரவி உள்பட 3 பேர் மீது வழக்கு விசாரணை கோவை மாஜிஸ்திரேட் ஆறாவது கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. நடிகை சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனை விபரங்கள் 3.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

Top