முக்கிய செய்திகள்

லக்‌ஷ்மி பாம் படத்தில் இடம்பெற்ற திருநங்கை தோற்றத்தை வெளியிட்டார்-நடிகர் அக்‌ஷய்குமார்

October 3, 2019

லக்‌ஷ்மி பாம் படத்தில் இடம்பெற்றுள்ள தனது திருநங்கை தோற்றத்தை நடிகர் அக்‌ஷய்குமார் வெளியிட்டுள்ளார்.ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011 ஆம் ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா. இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமாரும், ஹீரோயினாக ராய் லட்சுமியும் நடித்திருந்தனர். இவர்களுடன் கோவைசரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.த்ரில்லர் பேய் படமாக உருவான இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவரும் வண்ணம் காமெடி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 8 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இந்தி ரீமேக் பணிகளில் ஈடுபட்டார் ராகவா லாரன்ஸ். லக்‌ஷ்மி பாம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள அக்‌ஷய்குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்க, ஷமினா என்டர்டெயின்மென்ட் மற்றும் துஷார் என்டர்டெயின்மென்ட் ஹவுஸ் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர்.

ராகவா லாரன்ஸே இந்தியிலும் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆரம்பத்தில் தயாரிப்பாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தை விட்டு வெளியேறிய லாரன்ஸ், பின்னர் சமாதானமடைந்து படத்தை இயக்க சம்மதித்தார்.கடந்த மே மாதத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது அக்‌ஷய்குமாரின் தோற்றத்தை வெளியிட்டுள்ளது. அதில் திருநங்கை கதாபாத்திரத்தில் அக்‌ஷய்குமார் தோன்றியுள்ளார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் அக்‌ஷய்குமார், உங்களுக்குள் இருக்கும் கடவுளையும், உங்கள் பலத்தையும் கொண்டாடும் விழா தான் நவராத்திரி. இத்தினத்தில் என்னுடைய லக்‌ஷ்மி தோற்றத்தை உங்களிடம் பகிர்கிறேன். மிகவும் ஆர்வத்துடனும் பயத்துடனும் நான் எதிர்பார்க்கும் கதாபாத்திரம். வாழ்க்கையில் நாம் எடுக்கும் புதிய முயற்சி தான் சுவாரஸ்யம். இல்லையா என்று குறிப்பிட்டுள்ளார்.

Top