முக்கிய செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக பிரமுகர் மகன் திருமணம்…

September 11, 2019

சென்னை மெரினா கடற்கரையில், எம்.ஜி.ஆர். சமாதியின் பின்புறம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி உள்ளது. சுமார் 50 கோடி ரூபாயில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.ஜெயலலிதா நினைவிடத்தை அ.தி.மு.க. தொண்டர்கள் கோவிலாக கருதுகின்றனர். எந்த நல்ல காரியத்தை தொடங்கினாலும் அங்கு சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா சமாதியில் தூசி படிந்து, மலர்கள் கருகிப் போய் கவனிப்பாரற்று இருந்தது என சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானதுஇதைத் தொடர்ந்து ஜெயலலிதா சமாதியைத் தினமும் அலங்கரிப்பதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க தலைமை கழகம் செய்து உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று ஜெயலலிதா நினைவிடத்தில், அதிமுக பிரமுகர் மகனின் திருமணம் நடைபெற்றது. தென் சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பவானி சங்கர். இவரின் மகன் சதீஷ் மற்றும் மணமகள் தீபிகா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் நடைபெற்ற இந்த திருமண நிகழ்ச்சியில், எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Top