முக்கிய செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்-ரபேல் நடால்

September 7, 2019

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இறுதிச்சுற்றுக்கு ஸ்பெயினின் ரபேல் நடால் முன்னேறினார். நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் மற்றும் இத்தாலியின் மேட்டியோ பெரேட்டினி ஆகியோர் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7க்கு 6, 6க்கு 4, 6க்கு 1 என்ற செட் கணக்கில் வெற்றிப்பெற்று ரபேல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

27வது முறையாக கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ள நடால், 5ஆவது முறையாக அமெரிக்க ஓபன் இறுதி போட்டியில் விளையாட உள்ளார். இதற்கு முன்னர் 3 முறை ரபேல் நடால் அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இறுதிப்போட்டியில் தரவரிசையில் 5ஆம் இடத்தில் உள்ள ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவ்வை, தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ரபேல் நடால் எதிர்கொள்ள இருக்கிறார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நட்சத்திர வீராங்கனை செரினா வில்லியம்ஸ், கனடா நாட்டை சேர்ந்த 19 வயது வீராங்கனை பியான்கா அண்டிரெஸ்கு-வை எதிர்கொள்ள இருக்கிறார்.

Top