முக்கிய செய்திகள்

பிகில் படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல்…நீதிமன்றம் கூறிய தீர்ப்பு என்ன தெரியுமா…

October 22, 2019

பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் பிகில். இந்த படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, படத்துக்கு தடை விதிக்க கோரி உதவி இயக்குனர் செல்வா, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பின், காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் எனக் கூறி, வழக்கை வாபஸ் பெறவும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் கீழமை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார்.இதையடுத்து, செல்வா தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இயக்குனர் அட்லி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பிகில் படத்தின் கதை, 2018 ஜூலையில் பதிவு செய்யப்பட்டது எனவும், ஆனால் மனுதாரர் தன் கதையை 2018 அக்டோபரில் தான் பதிவு செய்துள்ளார் என வாதிட்டார்.மேலும், கீழமை நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் மனு திரும்பப்பெறப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.

படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காப்புரிமை மீறியதாக கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மனுதாரர் கூறவில்லை எனவும், பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி பட நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது முடிவெடுக்கும் முன், வழக்கை வாபஸ் பெறவும், உயர் நீதிமன்றத்தை அணுகவும் கீழமை நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

Top