முக்கிய செய்திகள்

தனிகுடித்தனத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்த இளம் ஜோடி…

October 31, 2019

கோவை மாவட்டம் சூலூர் அருகே தனிக்குடித்தனம் செல்வதற்கு அனுமதிக்காத விரக்தியில், இளம் ஜோடி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சூலூர் அருகே பொன்னான்டம்பாளையத்தைச் சேர்ந்த கேசவராஜ் என்பவருக்கும், அவரது மாமன் மகளான கிருத்திகா என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது.இருவரும், கேசவராஜின் பெற்றோர்களான ஜெய்சங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர்.ஜெய்சங்கர் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

தாயார் ரஞ்சனி அருகில் உள்ள நிறுவனத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கேசவராஜ் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் தனிக்குடித்தனம் செல்ல சம்மதம் கேட்டுள்ளனர். ஆனால் புதிதாக கட்டிய வீட்டின் கடன் முடியும் வரை கூட்டுக்குடும்பமாக வாழலாம் என பெற்றோர்கள் தெரிவிக்கவே அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இதனால் விரக்தி அடைந்த அந்த தம்பதி, வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. தீபாவளியைக் கொண்டாட தாய் வீட்டிற்கு வந்த கேசவராஜின் சகோதரி காயத்ரி, புதன்கிழமை காலை நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து வெளிவராத கேசவராஜையும், கிருத்திகாவையும் கதவை தட்டி அழைத்துள்ளார்.

ஆனால் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர், ஜன்னல் வழியாகப் பார்த்த போது கேசவராஜூம், கிருத்திகாவும் மின் விசிறியில் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இருவரது சடலங்களையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Top